வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

பாரதிதாசன் கவிதைகள்

வெள்ளம்வருமுன்
--------------------------------------

வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

தென்றலுக்கு நன்றி
--------------------------------------
கமுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?

ஒத்துண்ணல்
--------------------------------------

இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!



கூடத்திலே மனப் பாடத்திலே - விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை

ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்

உண்ணத் தலைப்படு நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற்

பட்டுத் தெறித்தது மானின் விழி.

ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் - இவன்

ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.

நீலவான ஆடைக்குள்

--------------------------------------

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

ஆற்றுநடை

--------------------------------------

நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை தூக்கி
உழவுப்பண் பாடலானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய் நடக்கின்றாள், வையம்
தழைகவே தழைக்க வென்றே!

தமிழை என் உயிரேன்பேன்
--------------------------------------

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

படைத்தமிழ்
--------------------------------------

இருளினை, வறுமை நோயை
இடருவேன்; என்னுடல் மேல்

உருள்கின்ற பகைக்குன்றை
நான் ஒருவனே உதிர்ப்பேன்;
நீயோ கருமான்செய் படையின் வீடு;
நான் அங்கோர் மறவன்! கண்ணற்

பொருள்தரும் தமிழே!
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!

பாரதி பற்றி பாரதிதாசன்

--------------------------------------


பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம்பட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.

அழகின் சிரிப்பில்
--------------------------------------

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!









கொட்டு முரசே!

எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!

இல்லாமை என்னும்பிணி
இல்லாமல் கல்விநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லி
கொட்டுமுரசே - வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று
கொட்டு முரசே!

சான்றாண்மை இவ்வுலகில்
தேன்றத் துளிர்த்¢ததமிழ்
மூன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
ஊன்றிய புகழ்சொல்லிக்
கொட்டு முரசே!

ஈன்று புறந்தருதல்
தாயின்கடன்! உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று

கருத்துகள் இல்லை: